Monday, January 1, 2018

அவர்கள் நம் அயல் மனிதர்கள் 09 – எம்.ரிஷான் ஷெரீப்




    காதலும் அன்பும் நேசமும் அனைத்து உயிர்களுக்குமே பொதுவானது. அந்த உணர்வுதான் ஒவ்வொன்றையுமே இவ்வுலகில் ஜீவிக்கச் செய்கிறது. வாழ்க்கை மீது பேராவல் கொள்ளச் செய்கிறது. தினமும் வாழ நேரும் புதுப்புது மாற்றங்களுடனான வாழ்வில், சக உயிரிடமிருந்து மாறாத அன்பைப் பெறுவது ஒரு பாக்கியமன்றி வேறென்ன?

     சகல வசதிகளும் காலடியில் கிட்டக்கூடிய இக் காலத்தைப் போலவன்றி, அக் காலத்தில் தொலைதூரம் சென்ற தம் அன்புக்குரியவர்களுக்கு கடிதம் எழுதியனுப்பி விட்டு, அதற்கு பதில் கிடைக்க மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுதும் கூட அந்த அன்பைக் குறித்து சிலாகித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அவர்களை அவ்வாறு காத்திருக்கச் செய்ததுவும் ஒரு ஆத்மார்த்தமான அன்புதான் இல்லையா?

     தாய் - சேய் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான அன்பு போலவே யார்,  எவரென்றே அறியாது ஏதோவொரு சந்திப்பின் போது அல்லது சடுதியாகக் கிடைத்த தொடர்பொன்றின் மூலம் இருவருக்கிடையில் தோன்றக்கூடிய உறுதியான அன்பும் கூட போற்றத்தக்கதுதான். சமகாலத்தில் உண்மையான அன்புக்கெல்லாம் சாத்தியமில்லை என நேசத்தில் தோற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். உண்மையான அன்பு எங்கும் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பாதுகாக்கத் தேவையான விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும், பூரண நம்பிக்கையும்தான் அரிதாகிக் கொண்டு வருகிறது.

     காதலையும், நேசத்தையும், அன்பையும் தடுப்பது நியாயமற்றது. அது ஒரு காட்டாறு. அதன் போக்கிலேயே பாய விடுவதன் மூலமே அது செல்லும் பாதையெல்லாம் வாடிய பயிர்களைத் துளிர்க்கச் செய்யும். கட்டுப்படுத்துவதன் மூலமோ, நிபந்தனைகளை விதிப்பதன் மூலமோ அதனை அடக்கிவிட முடியாது. எல்லாவற்றையும் மீறி அது பாய்ந்து கொண்டேயிருக்கும்.


எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?

நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து
தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று
என்னிடத்தில்


தென்படாத வர்ணக் கறையைப் போல
மிகப் பெரிதாகவும்
கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும்
இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய
நானறியாத ஏதோவொன்று
என்னிடம்


இந்தளவு தனிமை
எங்கிருந்துதான் உதித்ததோ
எனக்குள்ளே மூழ்கிப் போயிருந்த ஒன்று
எப்படி உனக்குரியதாயிற்றோ


எனது இதயத்தின்
எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்
இந்தளவு துயர் தந்து போக?

***

     உறவைப் பிரிந்து விலகிச் செல்பவர், தனக்குரியவற்றையெல்லாம் எடுத்துச் சென்ற போதிலும், அவர் ஏதோவொன்றைத் தவறுதலாக விட்டுச் செல்வதாகத் தோன்றுகிறது. அது நேசித்த மனதை மிகவும் பாரமாக அழுத்துகிறது. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத் துரத்துகிறது. இவ்வளவு துயரத்தையும்,  தனிமையையும் மீதமாகத் தந்து விட்டுப் போகும் அளவிற்கு,  இத்தனை காலமாக எனது இதயத்தின் எந்த இடத்தில்  நீ ஒளித்துக் கொண்டிருந்தாய் எனக் கேட்கச் செய்கிறது அன்பு.

     இந்தக் கவிதையை எழுதியிருக்கும் கவிதாயினி காஞ்சனா அம்லானி இலங்கையில் பத்திரிகைத் துறையில் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருபவர். சிங்கள மொழியில் சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். இவரது புதிய கவிதைத் தொகுப்பான ‘உனதிரு விழிகளும் பூமராங்குகள்’ இம் மாதம் ஏழாம் திகதி சிறப்பாக வெளியிடப்பட்டது.

     இரு ஜீவிதங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆரம்பிக்கும் காதல், திருமணம் ஆகிய உறவுகளில் அன்பின் நெருக்கம், அப் பந்தங்களை இன்னுமின்னும் நெருங்கச் செய்கிறது. அப் பிணைப்புக்களில் ஏற்படும் பிரிவும், விலகலும் அந்த உள்ளங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. கவிதாயினி காஞ்சனா அம்லானியின் இக் கவிதையும் கூட, இதயத்தில் ஆழமான வலியை மீதமாகத் தந்து விட்டுப் போன காதலொன்றைக் குறித்தே அமைந்திருக்கிறது. காதலும், நேசமும், அன்பும் அனைவருக்குமே பொதுவானது. அதன் பிரிவு தரும் வலியும் அவ்வாறுதான்.

- எம். ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 05 இங்கே 
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 06 இங்கே  
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 07 இங்கே      

No comments: